கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை

சென்னை: கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திடம் திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கட்சி பிரதிநிதிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

திமுக சட்டபிரிவு செயலாளர் கிரிராஜன்: கொரோனா பேரிடர் காலம் என்பதால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளோம். பதற்றமான சாவடிகளில் உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். வாக்குப்பதிவை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் எடுக்கும் முயற்சிகளுக்கு. திமுக முழு ஒத்துழைப்பைத்  தரும்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: அதிமுகவின் கருத்துகள் முன் வைக்கப்பட்டது. தேர்தல் சுதந்திரமான, நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 வரை மணி என்ற அளவில் தான் இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது 3 அடுக்கு பாதுகாப்பு, சிசிடிவி கேமரா இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பாஜ கராத்தே தியாகராஜன்: வாக்குப்பதிவு நேரத்தை 7-5 என்று மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம். 9 மாவட்ட வாக்காளர் விவரங்களை புகைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிட கோரிக்கை விடுத்துள்ளோம். பதற்றமான சாவடிகளில் உரிய பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும். தேர்தலுக்கு பாஜ முழு ஒத்துழைப்பைத் தரும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன்: 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தல் அலுவலர்கள் மட்டுமின்றி வாக்காளர் உட்பட அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு 7-6 என்று தான் இருக்க வேண்டும். சிறுபான்மை மக்கள், பழங்குடியினர், தலித் மக்கள் வசிக்கின்ற இடங்களிலேயே வாக்குப்பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

தேமுதிக சார்பில் பார்த்தசாரதி: பட்டியலினத்தவர்கள், ஆண் - பெண் ஆகியோருக்கு தொகுதிகள் வரையறுக்கப்பட்ட பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். 100 சதவீதம் தடுப்பூசி என்பதை கோரிக்கையாக வைத்துள்ளோம். பொதுமக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் விரைவில் நடத்த வேண்டும்.

தேசியவாத காங்கிரஸ் சாரதி: ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்துவிட்டு ஒட்டுமொத்தமாக அனைத்து உள்ளாட்சிகளுக்கும் உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இதேபோல், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தனர்.

Related Stories: