சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின்நிலையங்கள் அமைக்க வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ (திமுக) அரவிந்த் ரமேஷ் பேசும்போது, ‘சோழிங்கநல்லூர் தொகுதி 14வது மண்டலம், 168, 169வது வார்டில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம் பகுதியில் மின்னழுத்த குறைபாடு உள்ளது. அங்கு 110 கே.வி. அல்லது 33 கே.வி. மின்திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும். உள்ளகரம் பகுதி மக்கள் மின் கட்டணம் செலுத்த 2 கிமீ தூரம் செல்ல வேண்டியுள்ளது.

அதனால் அரசு வணிக வளாகம் அமைக்கும் இடத்தில் மின் கட்டணம் செலுத்த வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இசிஆர் நீலாங்கரை பகுதியில் அதிக குடியிருப்பு வருவதால் அங்கும் 33 கே.வி. மின் திறன் கொண்ட ஒரு துணை மின் நிலையமும், ஓஎம்ஆர் பகுதி, மேடவாக்கம் பகுதியில் 110 கே.வி. மின்திறன் கொண்ட துணை மின் நிலையமும் வேண்டும். ஜல்லடியன்பேட்டை, பெரும்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் துணை மின் நிலையமும் அமைத்து தர வேண்டும். சோழிங்கநல்லூர் தொகுதி பெரிய தொகுதி. அங்கு புதைவிட கம்பிகளை மாற்றி தர வேண்டும்’ என்றார்.

இதற்கு பதில் அளித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது: முன்னுரிமை அடிப்படையில் மேற்கண்ட இடங்களில் துணை மின் நிலையம் அமைக்க அரசு பரிசீலிக்கும். 33 கே.வி. திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க ஒரு ஏக்கர் நிலம் தேவை. திட்ட மதிப்பீடு ரூ.4.5 கோடி ஆகும். உறுப்பினர் கடந்த 21-3-2018 அன்று இதே அவையில் இந்த கோரிக்கையை எழுப்பி இருக்கிறார். புதைவட கம்பிகள் அமைக்கக்கூடிய பணிகள் மாநகராட்சி பகுதிகளில் எந்தெந்த இடங்கள் விடுபட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்து, அங்கு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிகளுக்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. முதல்வர் ஒப்புதலை பெற்று, வரும் காலங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Related Stories: