டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலையில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கம்பியில்லா இணைய வசதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடம், ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள கம்பியில்லா இணைய வசதியை திறந்து வைத்து, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில், சீர்மிகு சட்டப் பள்ளிக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில், 3,641 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள 3 தளங்களுடன் கூடிய 18 பொலிவுறு நவீன வகுப்பறைகளைக் கொண்ட கூடுதல் இளங்கலை வகுப்பிற்கான கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மேலும், சட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் சர்வதேச அளவிலான அன்றாட சட்டத் தீர்வுகளையும், சட்ட நுணுக்கங்களையும் உடனுக்குடன் அறிந்து தெரிந்து கொள்ளும் வகையில், 55 வகுப்பறைகளைக் கொண்ட இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புக் கட்டிடத்தில் ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள கம்பியில்லா இணைய வசதி சேவையினை மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 11 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் 5 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: