உடனடி கடன் பெற அழைக்கும் எஸ்எம்எஸ்களை நம்பி ஏமாறாதீர்கள்-கள்ளக்குறிச்சி சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் சமூக வலைதளம் மூலம் வருகின்ற போலி தகவலை நம்பி சிலர்  ஏமாற்றப்படுவதால் அதனை தடுக்கும் விதமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி சைபர்கிரைம் காவல்நிலையம் சார்பில்  கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதியில் துண்டுபிரசுரம் வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால்  தலைமையில், சைபர்கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்ராயன்  முன்னிலையில் பொதுமக்களுக்கு துண்டு

பிரசுரம் வழங்கப்பட்டன. சைபர்கிரைம்  ஆய்வாளர் தங்கமணி, உதவி ஆய்வாளர் முகமது அசாருதீன் மற்றும் போலீசார்கள்  உடன் இருந்தனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:

உங்கள்  முதலீட்டிற்கு தினந்தோறும் அதிக வட்டி தருவதாக போலியான நிறுவனங்கள்  பெயரில் எஸ்எம்எஸ்களை நம்பி உங்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாறாதீர்கள்.  யூடிப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பிரபலமாக உள்ள சில நபர்கள்  தங்களது சுயலாபத்திற்காக கூறும் பொய்யான ஆப்களை நம்பி உங்கள் பணத்தை  முதலீடு செய்து ஏமாறாதீர்கள். உடனடி கடன் பெற கீழ்கண்ட எண்ணை தொடர்பு  கொள்ளுங்கள் என்று வரும் எஸ்எம்எஸ்களை நம்பி ஏமாறாதீர்கள். பிரபலமான  நிறுவங்களின் கிப்ட் பெறுவதற்கு கீழ்க்காணும் லிங்கை தொடரவும் மேலும் 10  குழுக்களுக்கு அனுப்புங்கள் என்று வரும் வாட்சப் செய்தி மற்றும்  எஸ்எம்எஸ்களை பார்த்து ஏமாறாதீர்கள். பகுதி நேர வேலை, தினமும் இரண்டு மணி  நேரம் செலவிட்டு ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என வரும் எஸ்எம்எஸ்களை  நம்பி ஏமாறாதீர்கள்.

வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாகவோ அல்லது வேறு  வகையிலோ உங்களது ஏடிஎம் கார்டு, ஓடிபி அல்லது சிவிவி நம்பரை கேட்டால்  யாருக்கும் கொடுக்காதீர்கள். அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஏடிஎம் கார்டு  கொடுத்து பணம் எடுக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள். பின் நம்பரை நீங்களே  பதிவு செய்யுங்கள். பரிவர்த்தனை முடிந்தவுடன் கேன்சல் பட்டனை அழுத்துங்கள்.  அந்த நபர் திருப்பி கொடுக்கும் ஏடிஎம் கார்டு உங்களுடையதுதானா? என உறுதி  செய்துகொள்ளுங்கள். ஏதேனும் மோசடி நடந்தால் 24 மணி நேரத்திற்குள்  சைபர்கிரைம் உதவி எண் 155260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். இவ்வாறு  குறிப்பிடப்பட்டு இருந்தது.

Related Stories: