உங்களுக்கும் இந்த பிரச்னை இருக்கா?!

நன்றி குங்குமம் டாக்டர்

பேருந்து, ரயில், கப்பல் அல்லது விமானம் என எந்த வகை பயணமானாலும் வாகனம் நகரத் தொடங்கியதுமே சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவதைப் பார்த்திருப்போம். ராட்சத ராட்டினம், ரோலர் கோஸ்டர் ரைடு போன்ற கேளிக்கை விளையாட்டுகளின்போதும் இந்த அனுபவம் ஏற்படுவதுண்டு. எதனால் இப்படி ஓர் உணர்வு ஏற்படுகிறது என்று பொதுநல மருத்துவர் ஜிம்மி பிரபாகரனிடம் கேட்டோம்…

‘‘பயணத்தை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால், அதுவே வாந்தி, மயக்கம் என சிலரை அலற வைத்துவிடுவதும் உண்டு. இவர்களுக்கென்றே ஜன்னலோர சீட்டாக தேடிப்பார்த்து பிடிக்க வேண்டும் அல்லது தனியாக இவரை கவனித்துக்கொள்ள உடன் ஒருவர் வேண்டும். உடன் செல்லும் அவருக்கும் டென்ஷன். இந்த பிரச்னையை இயக்க நோய்(Motion Sickness) என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறோம்.

ஒருவருடைய உணர்வுகளுக்குள் ஏற்படும் குழப்பமே Motion Sickness-க்கு காரணமாகிறது. இயக்க நோய் என்பது உணர்ச்சி முரண் கோட்பாட்டினைக் கொண்டுள்ளது. இதன்படி காட்சியைப் பார்க்கும் கண்கள், ஒலியைக் கேட்கும் காதுகள் இந்த இரு புலனுணர்வுகளுக்கு இடையே மோதல் வரும்போது Motion Sickness ஏற்படுகிறது.

நம் காதினை வெளிக்காது(External ear), நடு காது (Middle ear), உள்காது (Inner ear) என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துகிறோம். வெளிப்படையாக நம் கண்களுக்கு தெரியும் பகுதியினை வெளிக்காது என்கிறோம். இந்த பகுதி Ear Drum-முடன் முடிந்துவிடும். இதற்குள் குட்டி குட்டி எலும்புகள் இருக்கும். அதற்கும் உள்ளே உள் காதில் Vestibule Cochlea என்று சொல்லப்படும் சின்னத்தண்டு அமைந்திருக்கும்.

சமநிலை உணர்வை பராமரிப்பது இந்த Cochlea-வின் முக்கியமான வேலை. இவை எல்லாமே ஒன்று சேர்ந்து ஒரு நெட்வொர்க்காக செயல்படுகிறது. இதை Vestibular system என்கிறோம். இந்த அமைப்புதான் உங்களைச் சுற்றி நடக்கக்கூடிய தகவல்களை மூளைக்கு எடுத்துச் சென்றுகொண்டே இருக்கும். Cochlea-விற்குள் ஒரு திரவம் சுற்றிக் கொண்டே இருக்கும். இந்த திரவம் உங்கள் தலை திரும்பும் பக்கமெல்லாம் நகர்ந்து கொண்டிருக்கும். ஈர்ப்பு உணர்திறன் கொண்ட இந்த திரவம் நீங்கள் நிற்கிறீர்களா, நகர்கிறீர்களா போன்ற சிக்னல்களை மூளைக்கு சொல்லும்.

மூளையானது இந்த சிக்னல்களையெல்லாம் ஒருங்கிணைத்து, சமநிலையை பராமரித்து வரும். ஆனால், சிலருக்கு சிலநேரங்களில் குழப்பமான சிக்னல்களை மூளை பெறவேண்டிய சூழல் வரலாம். உதாரணத்திற்கு பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் பயணம் செய்யும்போது எந்தவிதமான ஈர்ப்பு விசையில் இருக்கிறீர்கள் என்ற குழப்பம் வரும்.

அதாவது நகர்வதைப்போன்ற உணர்வு இருக்கும். ஆனால், உங்கள் கண்களானது நீங்கள் ஒரே இடத்தில் இருப்பதைப்போன்ற சிக்னலை மூளைக்கு அனுப்பும். இதுபோன்ற குழப்பமான சிக்னலை மூளை பெறும்போதுதான் இயக்க நோய்(Motion Sickness) வருகிறது. இதேநிலைதான் ஜெயின்ட் வீல், டோராடோரா போன்றவற்றில் சுற்றும்போதும் ஏற்படுகிறது.

இதன் அறிகுறிகள்

Motion Sickness பாதித்தவர்களுக்கு, திடீரென்று உடல் முழுவதும் வியர்த்து, சில்லென்று ஆகிவிடும். தலை சுற்றல், வாயினுள் அதிகப்படியான சலைவா உற்பத்தி, முகம் வெளிறுதல், வாந்தி, சோர்வு, மயக்கம், மூச்சுத்திணறல் மற்றும் தலைவலி ஏற்படலாம்.

சிகிச்சைகள்

பயணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் சில மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். இந்த மாத்திரைகள் சமநிலையைப் பராமரிக்க உதவும். காதின் பின்புறம் Patch போல பொருத்திக் கொள்ளக்கூடிய மருந்து ஸ்ட்ரிப்புகளும் இருக்கிறது. பயணத்திற்கு 4 மணி நேரம் முன்பு இதை போட்டுக் கொள்ளலாம். இதன் பலன் 3 நாட்கள் வரை நீடிக்கும்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

பயணத்தின்போது, வெளியிலும், உள்ளேயும் ஒரே மாதிரியான காற்றழுத்தம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். விமானம் கீழே இறங்கும் நிலையில் காதில் சமநிலையைப் பராமரிக்க சூயிங்கம் போன்று எதையாவது மெல்லும்போது இதை தவிர்க்க முடியும்.

இந்தப் பிரச்னை உள்ளவர்கள் பயணத்தின்போது காதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி பயணத்தின்போது படிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆழ்ந்து மூச்சுவிடுவது, ஒன்றின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்துவது போன்ற கவனத்தை திசை திருப்பும் செயல்களை செய்வதன் மூலம் இயக்க நோயைத் தவிர்க்க முடியும்.

- என்.ஹரிஹரன்

× RELATED குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் வீரமச்சான்பட்டி கிராமத்தினர் மனு