ஜெர்மன் பெண் புகார் விவகாரம் நடிகர் ஆர்யா, அவரது தாயார் பெயர் குற்றப்பத்திரிகையிலிருந்து நீக்கம்: சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி

சென்னை: ஜெர்மனி பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே நடிகர் ஆர்யா பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்போது அவர்களது பெயர்கள் நீக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இணைய வழியில் நம்பவைத்தும், ஆள்மாறாட்டம் செய்தும், வங்கியில் லோன் வாங்கித் தருவதாகக் கூறியும் பண மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை திறம்பட விசாரணை நடத்தி கைது செய்த 28 மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2 மாதங்களாக சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்சியாக நடைபெற்று வந்த நிலையில், அதில் பல்வேறு முக்கிய வழக்குகளின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திறமையாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைப் பிடித்த காவல் துறையினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே நடிகர் ஆர்யா மற்றும் அவரது தாயாரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் போது அவர்களது பெயர்கள் நீக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் ஆர்யா பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வீடியோ கால் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளதென அப்பெண்ணின் வழக்கறிஞர் கூறியுள்ள நிலையில், வழக்கறிஞரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப்படும். மேலும், தன்னை வழக்கிலிருந்து விடுவித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்த காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டே நடிகர் ஆர்யா தன்னை சந்தித்து பேசினார். மேலும் விநாயகர் சதுர்த்தியன்று பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னையில் வழங்கப்படும்.

தடையை மீறி ஊர்வலம் நடத்தினாலோ, அரசின் அறிவிப்பை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் குற்றங்களை தடுக்க ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் சைபர் காவல் நிலையங்கள் ஏற்கனவே இருந்து வரும் நிலையில் கூடுதலாக 4 சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டு வரும் அதி நவீன சைபர் ஆய்வகத்தின் பணிகள் இன்னும் 15 நாட்களுக்குள் முடிவடைந்து திறக்கப்படும் என்றார்.

Related Stories: