பள்ளிகள் திறந்தவுடன்தான் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா வந்தது என்பது தவறு: முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் தடுப்பூசி; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறந்தவுடன்தான் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து. அவர்களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால்தான், தற்போது தொற்று ஏற்பட்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, கிண்டி மடுவன்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வாரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மழைநீர் சேகரிப்பு திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 25 நீர் நிலைகள் ரூ.200 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது.  செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து, அவர்களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால் தான் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை, கேரளா எல்லைப் பகுதியில் இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது. கேரள எல்லையை ஒட்டி இருக்கக் கூடிய 9 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து 9 மாவட்டங்களில் 100 % தடுப்பூசி போடுவதற்கு கூடுதலாக வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். 9 மாவட்டங்களில் கூடுதலாக தடுப்பூசி போடுவதற்காக அனைத்து நடவடிக்கையும் சுகாதாரத் துறை எடுத்து வருகிறது. தசை சிதைவு போன்ற நோயினால் தமிழகத்தில் 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ அதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்படும். கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் 17 வயது 18 வயதிற்குள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் பேசி இருக்கிறோம். அதுகுறித்த ஆய்வு நடத்தி வருகிறோம். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Related Stories: