மாமல்லபுரத்தை மேம்படுத்த ரூ.461.22 கோடியில் திட்டம்: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சுற்றுலாத்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் மதிவேந்தன் கூறியிருப்பதாவது:

* ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சகம் நினைவு சின்ன தலமாக தேர்ந்தெடுத்துள்ள மாமல்லபுரத்தை மேம்படுத்த ரூ.461.22 கோடி மதிப்பீட்டில் ஆரம்பக்கட்ட திட்ட அறிக்கை, ஆலோசகர் அமைப்பு மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட அறிக்கை ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் மூலம் நிதி ஒதுக்குவதற்கு பரிசீலனையில் உள்ளது.

* ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னை தீவுத்திடலில் உள்ள சுமார் 21 ஏக்கர் நிலப்பரப்பில் நடத்தி வருகிறது. இதுவே நகரத்தின் மிகப்பெரிய வருடாந்திர பொருட்காட்சி என்பது சிறப்பாகும். தவிர வணிக கூட்டங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடக்கும் மையமாகவும் இப்பொருட்காட்சி திகழ்கிறது. 2020-21ல் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியையோ மற்றும் வேறு எந்த முக்கிய நிகழ்வுகளையோ நடத்த இயலவில்லை. தீவுத்திடல் மைதானத்தில் பல்வேறு கண்காட்சிகள், திருவிழாக்கள், பொழுதுபோக்கு மற்றும் இதர செயல்பாடுகளை நடத்துவதற்கான அதிநவீன உள்கட்டமைப்புடன் கூடிய செயல்பாட்டு மையமாக மாற்ற அனுபவம் வாய்ந்த திட்ட ஆலோசகர் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: