உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 80 கிலோ கெட்டு போன மீன் பறிமுதல்

தண்டையார்பேட்டை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக மீன் மார்க்கெட்டில் கெட்டு போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன.  இதையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் விற்பனை நிலையத்தில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறை சார்பில், சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான  அதிகாரிகள் சுந்தர்ராஜன், ஜெயகோபால், செல்வம்,  ராஜபாண்டி, சுந்தரமூர்த்தி, கணேஷ் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை தீவிர சோதனை நடத்தினர். அப்போது, விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட வஞ்சிரம், கொடுவா, பாறை, சங்கரா, சார்ப், இறால் உள்ளிட்ட மீன்கள்  கெட்டுபோய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 80  கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும் 12  விசை படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களில்  பார்மோலின் என்ற ரசாயனம் தெளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். பின்னர், மீன்களின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்க்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில்  ரசாயனம் கலந்திருப்பது தெரிந்தால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல் சென்னையில் உணவு விற்பனை கடைகளில் ஆய்வு செய்து, தரமற்ற உணவு விற்பனை செய்தால்  சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Related Stories: