துடியலூர் அருகே மழையால் மாற்றுத்திறனாளி வீடு இடிந்து விழுந்தது: 2 சிறுமிகள் உள்பட 7 பேர் தப்பினர்

பெ .நா. பாளையம்: கோவை துடியலூர அருகே மாற்று திறனாளியின் வீடு மழையினால் இடிந்து விழுந்தது. மேட்டுப்பாளையம் சாலை ஜி.என்.மில் பிரிவு அருகே உள்ள உருமாண்டம்பாளையம். இங்குள்ள ஜீவா வீதியில் குடியிருப்பவர் முருகன்  (58). மாற்றுதிறனாளியான இவர்  காலணி தைக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரங்கம்மாள் (50). இவர்களுக்கு தங்கராஜ் (33), வேல்மணி (25) என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தங்கராஜூக்கு திருமணமாகி கஸ்தூரி (25) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

மகன்கள், மருமகள் ஆகி்யோர் கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு முருகன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். அப்போது இந்த பகுதியில் விடிய விடிய கனமழை  பெய்தது. விடிந்ததும் குடும்பத்தினர் வீட்டுக்கு வெளியே வேலை செய்தனர். அப்போது முருகனின் ஓட்டு விடு இடிந்து விழுந்தது. அனைவரும் வெளியே இருந்ததால் அதிஷ்டவசமாக தப்பினர். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தும் இடிபாடுகளில் சிக்கி பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாகிவிட்டது.

இதனால் மாற்றுத்திறனாளி வீடு இன்றி குடும்பத்துடன் தவித்து வருகிறார். மாவட்ட நிர்வாகம் மாற்று  திறனாளி முருகனுக்கு உதவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை  வைத்துள்ளனர்.

Related Stories: