2018ம் ஆண்டு தீ விபத்தினால் சேதமடைந்த மதுரை மீனாட்சி கோயில் நுழைவாயில் ஓராண்டுக்குள் சீரமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்(திருமங்கலம்) பேசுகையில், ‘‘உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலின் ஒரு பகுதி கடந்த காலத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டது. இதை சீரமைக்கும் பணிக்காக முன்னாள் முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டு, பூமி பூஜை எல்லாம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த பணிகள் எப்போது முடியும்’’ என்றார்.  அமைச்சர் பி.கே.சேகர்பாபு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்து பாதிப்பை ஆய்வு செய்ய ஒரு குழுவை அப்போதைய ஆட்சியாளர்கள் அமைத்தார்கள். ஒரு முறை கூட அந்த குழு கூட்டப்படவில்லை.  

தீ விபத்து ஏற்பட்டதற்கு பிறகு, இதுவரையில் பணிகள் துவங்கப்படாமல் இருந்த வீரராகவன் வாயிலை பார்வையிட்டோம்.  தனியார் பங்களிப்போடு அரசு நிதியும் சேர்த்து தான் அந்த திருப்பணியை எடுத்திருக்கின்றோம். ரூ.19 கோடி செலவில் அதற்குண்டான கற்களை அளவிடும் பணி தயாரிக்கும் பணி நாமக்கலில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த கல்லை நாமக்கல்லிருந்து இங்கே கொண்டு வரும் போது, சேதாரம் ஏற்பட்டு விடும் என்பதால், கோயில் வளாகத்திலேயே மண்ணை நிரப்பி அதற்கென்று ஓரிடத்தை ஒதுக்க சொல்லியிருக்கிறார்கள்.

அந்த பணி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த பணியினை விரைவாக முடிப்பதற்காக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இன்னும் ஓராண்டிற்குள் அந்த பணி நிறைவு பெறும்.இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.

Related Stories: