நெதர்லாந்து டாக்டர் என்று கூறி பெண்ணிடம் 4.40 லட்சம் பறிப்பு டெல்லியில் பதுங்கி இருந்த நைஜீரிய கும்பலை சேர்ந்த 2 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவின் தனிப்படை அதிரடி

சென்னை:  சென்னை பெரம்பூரை சேர்ந்த 45 வயது ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மறுமணம் செய்ய முடிவு செய்தார். அதற்காக அவர் மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் வரன் பார்த்துள்ளார். அப்போது நெதர்லாந்தில் டாக்டராக பணியாற்றுவதாக முகமது சலீம் என்ற பெயரில் விபரங்கள் இருந்தது. இதை பார்த்த ராணி, முகமது சலீமுக்கு வாட்ஸ்அப் கால் செய்து பேசி வந்துள்ளார். ‘அவர், நான் நீண்ட நாள் தேடியது உங்களை போன்ற அழகான பெண்ணை தான்’ என்று ராணியிடம் ஆசை வார்த்தை சலீம் கூறியுள்ளார். அதற்காக நான் உங்களுக்கு ஒரு அன்பு பரிசு அனுப்புகிறேன் என்றும் கூறியிருக்கிறார். பின்னர் சில தினங்கள் கழித்து ராணியை பெண் ஒருவர் தொடர்பு கொண்டு மும்பை விமானநிலையம் சரக்கு முனையத்தில் இருந்து பேசுவதாகவும் உங்களுக்கு பார்சல் வந்துள்ளது. அதற்கான பதிவு கட்டணம் ₹28 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறினார். அதன்படி போன் செய்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு அவர் கேட்ட பணத்தை ராணி அனுப்பியுள்ளார். மீண்டும் மும்பையில் இருந்து பேசிய பெண் தொடர்பு கொண்டு உங்களுக்கு வந்துள்ள பார்சலில் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் இருப்பதாகவும், அதற்காக அபராத தொகை 77 ஆயிரம் கட்டினால் தான் உங்களுக்கு பார்சல் அனுப்பி வைக்க முடியும் என்று கூறியுள்ளார். பிறகு அவர் கூறியபடி 77 ஆயிரம் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

மறுநாள் சலீம் ராணியை தொடர்பு கொண்டு தனது நண்பர் பார்சலை டெலிவரி செய்ய இந்தியா வந்து இருப்பதாகவும் ஆர்.பி.ஐயில் இருந்து மெயில் வந்து இருப்பதாகவும், இதனால் 50 ஆயிரம் செலுத்தும்படியும்  கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ராணி பணம் கட்ட முடியாது என்று கூறிவிட்டார்.  பிறகு டெல்லியில் இருந்து பெண் ஒருவர் தொடர்பு கொண்டு உங்கள் வருங்கால கணவர் முகமது சலீம் டெல்லி விமானம் மூலம் வந்து இருப்பதாகவும், அவர் இந்தியாவில் நுழைவதற்கு பிஐஓ கார்டு இல்லை இதனால் 1.35 லட்சம் பணம் கட்டினால் தான் அவரை விடமுடியும் என்றும் கூறி பணம் கேட்டுள்ளார். தொடர்ந்து பணத்தை மட்டும் கேட்டு வருவதால் தன்னை திட்டமிட்டு ஏமாற்றி வருவதாக உணர்ந்த ராணி சென்னை மத்திய குற்றப்பிரிவில் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மேட்ரிமோனியல் வெளிநாட்டில் வரன் தேடிய ராணியின் விபரங்களை சேகரித்து போலியாக நெதர்லாந்து நாட்டு டாக்டர் முகமது சலீம் என்று புகைப்படத்தை அனுப்பி பணம் பறித்தது நைஜீரியா கும்பல் என தெரியவந்தது.அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், செல்போன் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை வைத்து டெல்லி போலீசார் உதவியுடன் டெல்லி உத்தம் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி மோசடியில் ஈடுபட்டு வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த பாலினஸ் சிகேலுவோ(31), சிலிட்டஸ் இகேசுக்வு(23) ஆகிய இரண்டு பேரை அதிரடியாக கைது செய்தனர்.

இவர்கள் இதுபோல் மேட்ரிமோனியல் தளங்களில் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை தேடும் பெண்களை குறிவைத்து, ஏமாற்றி பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய பல்வேறு வங்கிகளின் 10 ஏடிஎம் கார்டுகள், 15 செல்போன்கள், 4 லேப்டாப்கள், 4.30 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இரண்டு நைஜீரிய வாலிபர்களை தனிப்படை போலீசார் நேற்று இரவு சென்னைக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பெண்களை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: