சிவகாசியில் சாலையில் திரியும் மாடுகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி-கோசலைகளில் அடைக்கப்படுமா?

சிவகாசி : சிவகாசி நகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலைகளில் அடைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகாசி நகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த போலீசார் சிரமப்படுகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் நகரின் முக்கிய சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிவகாசி நகர் பகுதியில் மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் பலர்விபத்தில் சிக்கி வருகின்றனர். சிவகாசி பகுதியில் உள்ள கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாடுகளுக்கு கீரை, வாழைப்பழம் வழங்கி செல்கின்றனர்.

மேலும் மாடுகள் வளர்ப்போர் காலை மற்றும் மாலை நேரங்களில் பாலை கறந்து விட்டு மாடுகளை தெருக்களில் அலைய விட்டு விடுகின்றனர். இந்த மாடுகள் நகராட்சி காய்கறி மார்க்கெட், கோயில்கள், கடைவீதிகளில் உள்ள கழிவுகளை உண்பதற்காக தினமும் நகருக்குள் வந்து விடுகிறது. உணவுகளை உண்ட பின் சாலைகளிலேயே படுத்து உறங்குகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனா். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சிவகாசி பகுதியில் மாடுகள் வளர்ப்போர் தெருக்கள், சாலைகளில் அவற்றை அலைய விடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். பால் கறக்கும் நேரங்களில் மட்டும் மாடுகளை பிடித்து செல்கின்றனர். மற்ற நேரங்களில் மாடுகள் சாலைகளியேயே தஞ்சமடைந்து கிடக்கிறது. கோயில் பகுதியில் சுற்றித் திரியும் மாடுகள் பொதுமக்களை முட்டிகாயப்படுத்தும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் கோயிலுக்கு வரும் பெண்கள், குழந்தைகள் மாடுகளை பார்த்து அச்சப்படுகின்றனர். நகராட்சி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூராக சுற்றி திரியும் மாடுகளை பிடித்து கோசாலைகளில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: