கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீஸ் முக்கிய அறிக்கை தாக்கல்

* குற்றவாளிகள் சயான், மனோஜ் ஆஜர் * கூடுதல் விசாரணைக்காக கால அவகாசம்

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முக்கிய குற்றவாளிகளான சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, போலீசார் முக்கிய அறிக்கை தாக்கல் செய்தனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டியில் உள்ள ெசஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சயான் மற்றும் மனோஜ் ஆஜராகினர். மற்ற 8 பேரும் ஆஜராகவில்லை. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல்களாக சென்னையை சேர்ந்த ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். சாட்சிகள் தரப்பில் வக்கீல்கள் ஆனந்தகிருஷ்ணன், சந்தோஷ்குமார், சுரேஷ்குமார் ஆஜராகினர். விசாரணை காலை 11.30 மணிக்கு துவங்கியது.

இதற்காக கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், தடயவியல் நிபுணர் ராஜ்மோகன் மற்றும் மின் வாரிய உதவி பொறியாளர் ஆஜராக ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் மூவரும் ஆஜராகவில்லை. அப்போது போலீஸ் தரப்பில் முக்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணை இன்னும் முடிவடையவில்லை, மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் தொடர்ந்து விசாரிக்க வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அரசுவக்கீல்கள் மேல் விசாரணைக்கு போதுமான அவகாசம் தேவை என வலியுறுத்தினர். அதன்பேரில், நீதிபதி சஞ்சய் பாபா வழக்கு விசாணையை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இது குறித்து அரசு வக்கீல் ஷாஜகான் அளித்த பேட்டி:கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சந்தேக மரணமடைந்துள்ளார். ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இவை தனித்தனி நிகழ்வுகளாக இருந்தாலும், ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக இருக்கலாம் என்பதால் கூடுதல் புலன் விசாரணை தேவைப்படுகிறது.இந்த வழக்கில் ஒரு சில விஷயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இவ்வழக்கு தொடர்பாக தேவைப்பட்டால் யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். கூடுதல் விசாரணையில் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், இவ்வழக்கு தொடர்பாக முழு விவரங்களையும் வெளியே கொண்டு வர வேண்டும் என்பது அரசின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

வக்கீல் விஜயன் கூறுகையில், ‘‘இந்த வழக்கில், இதுவரை வக்கீல் இல்லாமல் இருந்த வாளையார் மனோஜூக்கு இலவச சட்ட உதவி மையம் மூலம் தற்போது வக்கீல் முனிரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக, கொடநாடு எஸ்டேட் பங்குதாரர் சசிகலா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சஜீவன் உட்பட 10 பேரை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது’’ என்றார்.

கூடுதல் எஸ்பி தலைமையில் விசாரணைக்கு தனிப்படை

கொடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்ளார். தற்போது எஸ்பி ஆசிஷ் ராவத் நேரடியாக இறங்கி விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், விசாரணையை தீவிரப்படுத்த தற்போது கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் விசாரணையை துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சயானுக்கு போலீஸ் பாதுகாப்பு

ஜாமீனில் உள்ள முக்கிய குற்றவாளியான சயான் அளித்த மறு வாக்குமூலத்தில், அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருக்கும், உள்ளூர் அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் கொடநாடு வழக்கில் தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று போலீசாரிடமும், நீதிமன்றத்திலும் சயான் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்று சயானுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சீருடை அணியாத இரு போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

Related Stories: