ஓடிடி படங்களை திரையிட மாட்டோம்: தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சில தியேட்டர்களில் வெளியான 2 வாரத்திற்கு பிறகு ஓடிடி தளங்களில் வெளியாக ஒப்பந்தம் செய்துள்ளன. குறிப்பாக, வருகிற 10ம் தேதி வெளியாக உள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி அவ்வாறாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதனால் இந்த படத்தை தியேட்டரில் திரையிட மாட்டோம் என்று தியேட்டர் அதிபர்கள் கூறிவிட்டனர். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தபோது தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே நிறைவேற்றிய தீர்மானத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அறிவித்து விட்டது.

இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது: ஒரு படம் தியேட்டரில் வெளியானால் 4 வாரங்களுக்கு பிறகே அந்த படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்கிற எங்கள் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. சில படங்கள் 2 வாரத்தில் ஓடிடியில் வெளியிட ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிகிறோம். அந்த படங்களின் வெளியீட்டின்போது அதுபற்றி பேசுவோம். இப்போது தலைவி படத் தயாரிப்பாளர் 4 வாரத்திற்கு பிறகு வெளியிட்டுக் கொள்வதாக கூறியிருக்கிறார். அதேபோல ஓடிடியில் முதலில் வெளியாகும் படத்தை ஒருபோதும் தியேட்டரில் திரையிட மாட்டோம். அப்படி வெளியிடுகிறவர்களின் படங்களுக்கு பிற்காலத்தில் ஒத்துழைப்பு தரமாட்டோம். இதுவும் ஏற்கனவே நாங்கள் நிறைவேற்றிய தீர்மானம்தான். அதே சமயம், ஓடிடிக்கென்று படங்கள் தயாரிப்பதையும், வெளியிடுவதையும் நாங்கள் தடுக்கவில்லை என்றார்.

Related Stories: