மதுரை, விருதுநகர் மாவட்டங்களை கலக்கிய ‘பகல் கொள்ளையர்கள்’ அதிரடி கைது

*ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல்

திருமங்கலம் : மதுரை, விருதுநகர் மாவட்டங்களை கலக்கிய பகல் கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மீட்டனர். மதுரை மாவட்டம் சித்தாலை, கட்ராம்பட்டி, தும்மகுண்டு, பன்னீர்குண்டு, கள்ளிக்குடி, சுந்தரகுண்டு, செக்கானூரணி, சமயநல்லூர், அலங்காநல்லூர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கொள்ளை சம்பவம் அதிகளவில் நடந்தது. பகல் வேளைகளில் மட்டும் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டிவந்தனர்.

இது குறித்து மதுரை மாவட்ட எஸ்பி பாஸ்கரன் உத்தரவின்படி திருமங்கலம் டிஎஸ்பி விநோதினி மேற்பார்வையில் தனிப்பிரிவு எஸ்ஐ ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.திருமங்கலம் கப்பலூர் டோல்கேட் அருகே நேற்று தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். இதில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீசார் திருமங்கலம் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து எஸ்பி பாஸ்கரன் திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பகல் வேளைகளில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பல் பிடிபட்டது. இவர்களிடம் விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள பாறைபட்டியை சேர்ந்த ராஜாகனி(29), சுந்தரம்(32), சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த தங்கபாண்டி(எ) ஆட்டுக்குட்டி (31) என்பது தெரியவந்தது.

இவர்களிடமிருந்து நகைகள், எல்சிடி டிவிக்கள், லேப்டாப், செல்போன், வெண்கலம் மற்றும் பித்தளை பாத்திரங்கள் மீட்கப்பட்டன. இது தவிர ரூ.2 லட்சம் பணமும் மீட்கப்பட்டது. மொத்த மதிப்பு சுமார் ரூ.6.80 லட்சமாகும்’’ என்றார். இரண்டு மாவட்டங்களை கலக்கிய கொள்ளையர்களை பிடித்த தனிப்படைக்கு எஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி விநோதினி பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: