பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா துவக்கம்

திருப்புத்தூர் : பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் சதுர்த்தி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், விநாயகர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது.

பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11.30 மணிக்கு கொடியேற்றப்பட்டு சதுர்த்தி பெருவிழா துவங்கியது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சிவாச்சாரியார்கள், கோயில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்வான கஜமுக சூரசம்ஹாரம், தேரோட்டம், திருவீதி உலா இம்முறை நடைபெறாது.

விழாவின்போது தினசரி காலை, இரவு உற்சவர் விநாயகர் பிரகார வலம் வருதல் நடைபெறும். 9ம் திருநாளில் மாலையில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சி தருவார். விநாயகர் சதுர்த்தியன்று காலை தீர்த்தவாரியும், மதியம் முக்கூரணி மோதகம் படையலும், இரவில் ஐம்பெரும் கடவுளர் எழுந்தருளலுடன் விழா நிறைவடையும்.

மேலும், கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். குழந்தைகள், வயதானவர்கள் வருவதை தவிர்க்க வேண்டுமென கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். விழா ஏற்பாட்டினை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராமசாமி செட்டியார் மற்றும் வலையப்பட்டி நாகப்பன் செட்டியார் செய்து வருகின்றனர்.

Related Stories: