சூப்பர் மார்க்கெட், பழக்கடைகளில் வசூல் வடமாநில டிஐஜி என மிரட்டியவர் கைது: பெண் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பா?

நாகை: நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த வாலிபர் ஒருவரை வெளிப்பாளையம் போலீசார் நேற்றுமுன்தினம் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா ஜமீன்புதூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ் (35), தனது பெயரை மகேந்திரவர்மா என மாற்றிக்கொண்டு நாகை புதிய கடற்கரை செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 24ம் தேதி பொருட்கள் வாங்கி கொண்டு குஜராத்தில் டிஜஜியாக இருப்பதாக கூறி பணம் கொடுக்காததும், அதனைத்தொடர்ந்து 28ம் தேதி வெளிப்பாளையம் பூங்கா அருகே பழக்கடை வைத்திருக்கும் ரவி என்பவரிடம் ஆயிரம் ரூபாய்க்கு பழங்கள் வாங்கிக்கொண்டு டிஐஜி என கூறி மிரட்டி சென்றதும், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் இருப்பதும் தெரிய வந்தது.

இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம்  மகேஷ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த சப் இன்ஸ்பெக்டர், பணி உயர்வு பெற்று நாகையில் இன்ஸ்பெக்டராக வந்துள்ளார். நாகை வந்த மகேஷ் தனது பெயரை மகேந்திரவர்மா என்று மாற்றிக்கொண்டு வடமாநிலத்தில் டிஐஜியாக வேலை பார்த்து வருவதாகவும்,

இன்ஸ்பெக்டராக பணியாற்றும் பெண்ணின் கணவர் என்றும் கூறி நாகையில் பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டதும், காவல்துறையில் உள்ள சிலரிடமும் பதவி உயர்வு வாங்கி தருவதாகவும் கூறி மகேந்திரவர்மா ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனால், பெண் இன்ஸ்பெக்டருக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர். அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: