ஆவடி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றிகள் அமைப்பு: அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்

ஆவடி: ஆவடி தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், ஆவடி, கோவில்பதாகை ஆகிய பகுதிகளில் நாளுக்குநாள் புதிதாக நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக குடியிருப்புகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், குடியிருப்புகளில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி மக்கள் சிரமப்பட்டனர். மேலும், அவர்கள் தங்களது மின்தேவையை பூர்த்திசெய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.  இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை புகார் செய்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில், திமுக ஆட்சி வந்தவுடன் ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசரிடம் அதிக திறன்கொண்ட மின் மாற்றிகளை அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அவர் இந்த பகுதிகளை ஆய்வுசெய்து புதிய மின்மாற்றிகளை அமைக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆவடி கோட்ட மின்வாரியம் சார்பில் திருமுல்லைவாயல் பகுதிகளான வெங்கடாச்சலம் நகர், சோழம்பேடு சாலை வீட்டு வசதி வாரியம், தொல்காப்பியர் தெரு, ஆவடி-வசந்தம் நகர், கோயில்பதாகை ஆகிய 5 இடங்களில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 5 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. இதனை, நேற்று முன்தினம் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆவடி பகுதி செயலாளர்கள் பேபி சேகர், ஜி.ராஜேந்திரன், ஜி.நாராயணபிரசாத், ஆவடி மாநகராட்சி பொறியாளர் வைத்திலிங்கம், மின்வாரிய செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி செயற்பொறியாளர்கள் ராமகிருஷ்ணன், ராஜேஷ்கண்ணா, உதவி பொறியாளர்கள் மோகன், பிரகாஷ், சதீஷ், முருகன் உள்பட பொது நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: