உடுமலை வனச்சரகத்தில் மாவடப்பு அருகே இறந்து கிடந்த யானையின் தந்தம் வெட்டி திருட்டு-வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை

உடுமலை : உடுமலை வனச்சரகத்தில் இறந்து கிடந்த யானையின் தந்தத்தை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம நபர்களை வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகம் மாவடப்பு அருகே உள்ள சடையம்பாறையில் ஏராளமான யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. நேற்று இப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து சென்றபோது, ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டனர். மேலும் யானையின் ஒரு தந்தம் வெட்டி திருடப்பட்டதையறிந்தனர்.

இதுபற்றி வேட்டைத் தடுப்பு காவலர்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உதவி வன காப்பாளர் கணேஷ்ராம், உடுமலை வனச்சரகர் தனபாலன், வனவர்கள் தங்கபாண்டியன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

 பின்னர் கால்நடை மருத்துவர்களை சம்பவயிடத்துக்கு வரவழைத்து யானையின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதில் யானை இயற்கையாக மரணமடைந்தது தெரியவந்தது. இறந்த யானையின் உடலிலிருந்து மர்ம நபர்கள் தந்தத்தை வெட்டி எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. மேலும் யானையின் உடல் பாகங்கள் உடல்கூராய்வு பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

Related Stories: