பழநி அருகே இரும்பை பிரிக்க குப்பைக்கழிவுகளை எரிப்பால் சுகாதாரக்கேடு

பழநி : பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் இரும்பை பிரிப்பதற்காக குப்பைக் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.பழநி அருகே நெய்க்காரப்பட்டி செல்லும் வழியில் தனியார் மில் உள்ளது. இதன் எதிர்புறம் உள்ள குளக்கரையில் நெய்க்காரப்பட்டி பேரூராட்சி மற்றும் அ.கலையம்புத்தூர் ஊராட்சி பகுதிகளின் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. தவிர, இறைச்சி கழிவுகள், உயிரிழந்த கால்நடைகள் போன்றவையும் வீசப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசும். இந்நிலையில் குப்பைகளில் உள்ள இரும்பு துகள்கள், செம்புக்கம்பிகள், தகரம் போன்றவற்றை பிரித்தெடுப்பதற்காக சிலர் குப்பைகளுக்கு தீவைத்து விடுகின்றனர்.

இதனால் ஏற்படும் புகை அப்பகுதியில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அளவிற்கு வீசுகிறது. மேலும், துர்நாற்றமும் அதிகளவு ஏற்படுகிறது. இதனை சுவாசிக்கும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பல்வேறு மூச்சுத் தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் அப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மையம் ஏற்படுத்தி, குப்பைகளை தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரித்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். குப்பைகளை எரிப்பவர்களை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகள் கொட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: