திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் இருந்து 6 புதிய வழித்தடங்களில் 8 பேருந்துகள் இயக்கம்: கோவை, ராமேஸ்வரத்துக்கும் செல்கிறது

சென்னை: திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் இருந்து 6 புதிய வழித்தடங்களில் 8 பேருந்துகளின் இயக்கம் நேற்று முதல் தொடங்கியது. சென்னை மாநகர் போக்குவரத்துக்கழத்தின் கட்டுப்பாட்டில் 31 பணிமனைகள் உள்ளன. இதன் மூலமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக இருக்கும் திருவொற்றியூர் பேருந்து நிலையத்திலிருந்து, கோயம்புத்தூர் மற்றும் ராமேஸ்வரத்திற்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக வட சென்னை எம்.பி கலாநிதிவீராசாமி, கே.பி.சங்கர் எம்எல்ஏ ஆகியோரிடமும் வலியுறுத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பாக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் எடுத்துச் சென்றார். இதனையடுத்து, முதல்வரின் உத்தரவுப்படி திருவொற்றியூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கான துவக்கவிழா நேற்று காலை, திருவொற்றியூர் புதிய பேருந்து நிலையத்தில் நடந்தது இந்நிகழ்ச்சிக்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமை வகித்தார். சென்னை வட கிழக்கு  மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். திமுக பகுதி செயலாளர் தி.மு.தனியரசு வரவேற்றார். கலாநிதி வீராசாமி எம்பி, புதிய வழித்தடங்களின் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதன்படி புதிய பேருந்துகள் திருவொற்றியூர் - கோயம்புத்தூர்; திருவொற்றியூர் - ராமேஸ்வரம்; திருவொற்றியூர் - தாம்பரத்திற்கு தலா ஒரு சொகுசு பஸ் என மூன்று சொகுசு பேருந்து இயக்கப்படுகிறது.

மேலும் திருவொற்றியூர் - அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு 2 விரைவு பேருந்துகள்; திருவொற்றியூர் - பிராட்வேவுக்கு சாதாரண கட்டணத்தில் 2 பேருந்து; திருவொற்றியூர் ஓடியன்மணி தியேட்டர் - கோயம்பேடுக்கு சாதாரண கட்டணத்தில் 1 பேருந்து என மொத்தம் 6 புதிய வழித்தடங்களில் 8 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம், பொது மேலாளர் செல்வமணி, பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன், முன்னாள் கவுன்சிலர்கள்  கே.பி. சொக்கலிங்கம், சைலஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: