ஜி.கே.மூப்பனார் 20வது நினைவு நாள்: கவர்னர் தமிழிசை, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

சென்னை: ஜி.கே.மூப்பனார் நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தமாகா நிறுவன தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 20வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூப்பனாரின் நினைவிடத்தில் இன்று  காலை முதல் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். தமாகா  தலைவர் ஜி.கே.வாசன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அப்போது, நினைவிடத்துக்கு வந்த புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதை தெடார்ந்து, தமாகா மூத்த தலைவர் விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில நிர்வாகிகள் ஜவஹர்பாபு, ஆர்.எஸ்.முத்து, சென்னை நந்து, மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், சி.பிஜூ, சத்தியநாராயணன், பாலா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

 இதை தொடர்ந்து, நினைவிட வளாகத்தில், சென்னை மாவட்ட தமாகா தலைவர்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தையல் மிஷின், அயன்பாக்ஸ், வேட்டி, சேலைகள், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வழங்கினார். ஆண்டுதோறும் ஜி.கே.மூப்பனார் நினைவு நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், ஆயிரக்கணக்கானோருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: