இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் கருவிழிகள் தேவைப்படுகிறது கண் வங்கிகள், ஆராய்ச்சி கட்டமைப்பை அதிகரிப்பது அவசியம்: அகர்வால்ஸ் கண் மருத்துவமனை டாக்டர் சீனிவாசன் ஜி.ராவ் தகவல்

சென்னை: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் கருவிழிகள் தானமாக தேவைப்படுகிறது. எனவே கண் தானம் குறித்த விழிப்புணர்வு, கண் வங்கிகள்  மற்றும்   ஆராய்ச்சி மையங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது அவசியமாகும்  என்று அகர்வால்ஸ் கண் மருத்துவமனை டாக்டர் சீனிவாசன் ஜி.ராவ் கூறினார். இது குறித்து அகர்வால்ஸ் கண் மருத்துவமனை டாக்டர் சீனிவாசன் ஜி.ராவ்  கூறுகையில்: கருவிழியில் ஏற்படும் சேதங்களினால் இந்தியாவில் 20 லட்சம் பேர்  பார்வையிழப்பால் அவதியுறுகின்றனர். தாமதமின்றி மாற்று கருவிழிகள்  பொருத்தப்படுமானால், இவர்களுள் நான்கில் ஒருவரது பார்வைத்திறன்  பிரச்னைக்கு தீர்வுகாண இயலும். நமது உடலின் எந்தவொரு உறுப்பையும் போலவே  கண்ணின் கருவிழியை இறப்பிற்குப் பிறகு தானமாக வழங்கலாம். இறப்பிற்குப் பிறகு மட்டுமே கண்களை தானம் செய்யலாம். இறந்தவரின் கண் தானத்திற்கான அங்கீகாரத்தை,  அவரது குடும்ப உறுப்பினர், வாரிசு வழங்க வேண்டும். கிட்டப்பார்வை,  தூரப்பார்வை அல்லது சிதறல்பார்வை ஆகியவற்றிற்காக கண்ணாடிகள்  பயன்படுத்தியிருப்பதும் மற்றும் கண் புரைக்காக அறுவைசிகிச்சை  செய்திருப்பதும்கூட கண்தானம் செய்வதற்கு தடைகளாக இருப்பதில்லை.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1  லட்சம் கருவிழிகள் தானம் தேவைப்படுகிறது. ஆனால் 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலேயே உள்ளது. நம் நாட்டில் ஓராண்டில் உயிரிழப்பவர்கள் 1 கோடி பேர். ஆகவே கண் தானம் குறித்த விழிப்புணர்வை உயர்த்துவதும்,  கண் வங்கிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் போன்ற கட்டமைப்பு  வசதிகளை  அதிகரிப்பதும் அவசியமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல்,  செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை தேசிய கண் தான இருவார  காலம் அனுசரிக்கப்படுகிறது என்றார்.

Related Stories: