ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து 3.4 டிஎம்சி கிருஷ்ணா நீர் கிடைத்துள்ளது

* 5 ஏரிகளில் 8.89 டிஎம்சி நீர் இருப்பு

* நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தற்போது வரை 3.4 டிஎம்சி கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஏற்கனவே, 4 டிஎம்சி பாக்கி வைத்துள்ள நிலையில், மேலும், இந்த தவணை காலத்தில் 8 டிஎம்சி தர வேண்டியுள்ளது. இதனால், கண்டலேறு அணையில் இருந்து சென்னை மாநகரின் குடிநீருக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி தமிழக எல்லைக்கு  650 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தற்போது 3406  மில்லியன் கன அடி அதாவது 3.40 டிஎம்சி நீர் வரை தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.

இதன் காரணமாக 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கெண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் 2492 மில்லியன் கன அடியாகவும், 3300 மில்லியன் கன அடி கொண்ட புழல் ஏரியில் 2833 மில்லியன் கன அடியாகவும், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 622 மில்லியன் கன அடியாகவும், 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2552 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன் கோட்டை நீர்த்தேக்கத்தில் 484 மில்லியன் கன அடி என மொத்தம் 8.89 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இந்த நீர் இருப்பை கொண்டு 8 மாதங்களுக்கு சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: