தடைகளை கடந்து பங்கேற்பு; பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானார் குமரி வீராங்கனை: கிராம மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகம்

நாகர்கோவில்: தடைகளை கடந்து நீதிமன்ற உத்தரவின்படி, போலந்து நாட்டில் நடந்த சர்வதேச செவித்திறன் குன்றியவர்களுக்கான தடகள போட்டியில் கலந்து ெகாண்ட குமரி மாணவி, நீளம் தாண்டுதலில் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள தேர்வு ஆனார். இந்த மகிழ்ச்சியை ஊர் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் முஜீப். இவரது மகள் சமீஹா பர்வீன் (18). 7 வயதாக இருக்கும் போது ஏற்பட்ட காய்ச்சலால் காது கேட்கும் திறனை இழந்ததுடன், பேசும் திறனையும் இழந்தார்.

ஆனால் சமீஹா பர்வீன் மனமுடையவில்லை. கல்வியுடன், தடகள விளையாட்டிலும் சாதனைகள் படைத்தார். குறிப்பாக நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்தார். கடந்த 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்று 9 தங்கம் உள்பட 12 பதக்கங்களை சமீஹா பர்வீன் பெற்றார். இந்நிலையில் போலந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச செவித்திறன் குன்றியவர்களுக்கான (டெப் அத்லெட்டிக்ஸ்) தடகளப் போட்டிகளில் பங்கேற்க சமீஹா பர்வீன் தேர்வானார். டெல்லியில் நடந்த தகுதித் தேர்விலும் அதிக புள்ளிகள் பெற்று தேர்வானார்.

ஆனால் இத்தகுதித் தேர்வில் வேறு எந்த வீராங்கனைகளும் தேர்வாக வில்லை. இதனால் தேர்வான சமீஹா பர்வீன் நிராகரிக்கப்பட்டார். ஒரே ஒரு நபருக்காக பயிற்சியாளர் மற்றும் குழுக்களை அனுப்ப முடியாது என ஒன்றிய விளையாட்டு துறை கூறியது. ஆனால் இப்போட்டியில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என்ற முனைப்பில் சமீஹா பர்வீன் தமிழக அரசை அணுகினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு மாணவி சமீஹா பர்வீன், போலந்து செல்வதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்தினார்.

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, சமீஹா பர்வீன் போலந்து போட்டியில் பங்கேற்க அரசு ஆவன செய்ய வேண்டும் என உத்தரவு பெறப்பட்டது.

இதையடுத்து கடந்த 13ம் தேதி இரவு சமீஹா பர்வீன் டெல்லி புறப்பட்டு சென்றார். ஒரு வாரம் டெல்லியில் பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகளுக்கு பின் அவர் போலந்து புறப்பட்டார். நேற்று மாலை போலந்தில் நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் சமீஹா பர்வீன் பங்கேற்றார். இந்த போட்டியில் முதல் 8 இடங்களை பெறுகிறவர்கள் அடுத்து நடைபெற உள்ள மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் அந்தந்த நாடுகள் சார்பில் கலந்து கொள்வார்கள் என்ற விதிமுறையும் வகுக்கப்பட்டு இருந்தது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற சமீஹாபர்வீன், 7வது இடத்தை பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த போட்டியை கடையாலுமூட்டில் உள்ள கிராம மக்கள் அகண்ட திரையில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒலிம்பிக் போட்டிக்கு சமீஹா பர்வீன் தேர்வானதும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஊர் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாற்று திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக் போட்டி, தற்போது டோக்கியோவில் நடக்கிறது. ஆனால், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பாரா ஒலிம்பிக், பாரீஸ் நகரில் 2024ல் நடைபெற உள்ளது. அங்குதான் சமீஹா பர்வீன் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: