சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு: ஒன்றிய கல்வி அமைச்சருக்கு பேராசிரியர் அவசர கடிதம்

சென்னை: சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள், பணியாற்றும் பேராசிரியர்கள் இடையே சாதிய பாகுபாடு  இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதனால் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் ஐஐடி வளாகத்தில் அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக, மனமுடைந்த மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது. சாதியப் பாகுபாடு இருப்பதை சுட்டிக்காட்டியதுடன், அதுதொடர்பான புகாரையும் ஐஐடியின் பேராசிரியர் விபின்  பி.வீட்டில் கடந்த ஜூலை மாதம் ஐஐடியின் இயக்குநருக்கு கொடுத்தார். அத்துடன் தான் அந்த ஐஐடியில் பணியாற்ற விரும்பவில்லை என்பதையும் தெரிவித்து ராஜினாமா கடிதத்தையும் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர், தற்போது ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, மேற்குறிப்பிட்ட சாதியப் பாகுபாடு குறித்து குறிப்பிட்டு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளார். விபின் பி.வீட்டில் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை ஐஐடியில் சாதியப் பாகுபாடு இருப்பதாக கூறப்பட்ட புகாரின் மீது விசாரணை நடத்த அமைக்கப்பட்ட 3 நபர் குழுவில், நான் ஏற்கனவே குற்றம்சாட்டிய ஜோத்ரிமாயா திரிபாதியும் உள்ளார். விசாரணைக் குழுவில்  இருந்து அவரை மாற்ற வேண்டும் என்று கேட்டு ஐஐடி நிர்வாகத்துக்கு இரண்டு முறை கடிதம் எழுதினேன். மேலும் விசரணை முடியும் வரையில் துறைத் தலைவர் பொறுப்பில் இருந்து அவரை தற்காலிகமாக நீக்க வேண்டும் என்வும் வலியுறுத்தி இருந்தேன்.

பேராசிரியர் ஜோத்ரி மாயா திரிபாதி, சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையில் எனக்கு எதிரான சாதிய பாகுபாட்டுக்கு காரணமாக இருந்தவர். மேலும் மானுடவியல் துறையின் தலைவராகவே அவர் நீடித்ததால் விசாரணை முறையாக நடக்கவில்லை. அத்துடன், பதவி உயர்வு மற்றும் ஆராய்ச்சிக்கான நிதியை பெறும் துறையின் தலைவருக்கான அதிகாரம் பெற்றவராகவும் இருக்கிறார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி விசாரணையை தவறான முறையில் கொண்டு செல்கிறார். சாட்சிகளையும் கலைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே மேற்கண்ட விசாரணை முடியும்  வரையில் திரிபாதியை துறைத் தலைவர் பதிவியில்  இருந்து நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதியும் ஐஐடி நிர்வாகம் அவரை துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கவில்லை. எனவே நேர்மையான விசாரணை நடக்க ஒன்றிய அமைச்சர் உதவ வேண்டும். மானுடவியல் மற்றும் சமூகவியல் துறையின் தலைவர் பதவியில் இருந்தும், விசாரணைக் குழுவில் இருந்தும் திரிபாதி நீக்கப்பட வேண்டும். அதற்கு பிறகு 3 நபர் கொண்ட குழுவை அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: