விவசாயியை தாக்கிய விவகாரம் விஏஓ, கிராம உதவியாளர் கைது

அன்னூர் : அன்னூர் அருகே ஒட்டர்பாளைம் விஏஓ அலுவலகத்தில் விவசாயி தாக்கப்பட்ட விவகாரத்தில் விஏஓ கலைச் செல்வி, கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.    கோவை மாவட்டம், அன்னூர் தாலுகா ஒட்டர்பாளையம் விஏஓ அலுவலகத்தில் ஆவண திருத்தம் சம்பந்தமாக சென்ற விவசாயி கோபால்சாமிக்கும், விஏஓ கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துச்சாமிக்கும் இடையே கடந்த சில வாரத்திற்கு முன் வாக்குவாதம் ஏற்பட்டது.மறுநாள் கோபால்சாமியின் காலில் கிராம உதவியாளர் முத்துசாமி விழுந்து கதறி மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதையடுத்து கோபால்சாமி மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு பின் வெளியான புதிய வீடியோவில் விவசாயி கோபால்சாமியை கிராம உதவியாளர் முத்துச்சாமி தாக்கி, தகாத வார்த்தையால் திட்டும் காட்சி இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாய அமைப்புகள், பிற அமைப்புகள் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டங்களை நடத்தின. இந்நிலையில் விஏஓ கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் விவசாய அமைப்புகள், விவசாயி கோபால்சாமி மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். விவசாயி கோபால்சாமி நில ஆவணத்தில் அவரது பெயரை நீக்கி, முறைகேடு செய்த வருவாய் துறை அதிகாரிகளை பணி நீக்கி கைது செய்ய வேண்டும், அரசு ஊழியர்கள் வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். நில ஆவணத்தில் கோபால்சாமி பெயரை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அன்னூர் தாலுகா அலுவலக வாயில் முன் கால வரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை நேற்று துவக்கினர். போராட்டத்தில் விவசாயி கோபால்சாமியும் பங்கேற்றார்.

இத்தகவலறிந்து சம்பவயிடம் வந்த அன்னூர் எஸ்பி நித்தியா விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், மேலதிகாரிகள் வர வேண்டும் என விவசாயிகள் கூறியதால் கோவை வடக்கு ஆர்டிஓ ரவிச்சந்திரன், மேட்டுப்பாளையம் டிஎஸ்பி ஜெய்சிங் சம்பவயிடம் வந்து விவசாயிகள் கணேசன், காளிசாமி, நடராஜன், வேணுகோபால் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விவசாயி கோபால்சாமியின் ஆவணத்தில் நீக்கப்பட்ட அவரது பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும்.

இதில் தொடர்புடைய நில அளவையர் மற்றும் அன்னூர் தாசில்தார், விஏஓ ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆர்டிஓ ரவிச்சந்திரன் இதனை ஏற்றுக்கொண்டதை அடுத்து நேற்று காலை 11 மணிக்கு துவங்கிய போராட்டத்தை மதியம் 2:30 மணி அளவில் விவசாயிகள் கைவிட்டனர். விவசாயிகளின் போரட்டத்தையடுத்து விஏஓ கலைச்செல்வி, கிராம அதிகாரி முத்துச்சாமி ஆகியோரை அன்னூர் போலீசார் நேற்று இரவு  கைது செய்தனர்.

Related Stories: