இனி கல்லூரிகளில் பிஎச்டி படிக்கலாம் தமிழகத்தில் 10 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: இனி கல்லூரிகளிலும் பிஎச்டி படிக்கலாம் என்றும், தமிழகத்தில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்த பின்பு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:  தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும் மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதற்கு வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழியிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூரிலும், ஈரோடு மாவட்டத்தில் தாளவாடியிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் மானூரிலும், திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரத்திலும், தர்மபுரி மாவட்டத்தில் ஏரியூரிலும், புதுக்ேகாட்டை மாவட்டத்தில் ஆலங்குடியிலும், வேலூர் மாவட்டத்தில் சேர்க்காட்டிலும் புதிய இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். மேலும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றும் தொடங்கப்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 10 மின்னணு நூலகங்கள் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்படும். புதிதாக தொடங்கப்பட்ட 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருவதால் அந்த கல்லூரிகளுக்கு ரூ.45.32 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலேயே ஆராய்ச்சி படிப்புகளை (பி.எச்டி) மேற்கொள்ளும் வகையில் செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், கோவில்பட்டி, சென்னை- நந்தனம் கல்லூரி, திருப்பூர் ஆகிய 10 இடங்களில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக ஆராய்ச்சி பாடப் பிரிவுகள் தொடங்கப்படும்.

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 100 பாடப் புத்தகங்கள் ரூ.2 கோடி செலவில் தமிழில் மொழி பெயர்க்கப்படும். மேலும் பட்டயப் படிப்புகள் தமிழ் வழியில் தொடங்கப்படும். பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் மகளிர் சேர்க்கை குறைவாக உள்ளது. அதை உயர்த்தும் வகையில் மகளிருக்கான பட்டயம் மற்றும் குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கப்படும். ஈரோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றப்படும். மாணவர் சேர்க்கையில் 35 சதவீத இடங்கள் மாநில போக்குவரத்து கழக பணியாளர்களின் பிள்ளைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

தொழில்நுட்ப பட்டய படிப்புகளான வணிகவியல் பயிற்சி பட்டயப் படிப்பு, வணிகவியல் பயிற்சி மற்றும் கணினி பயன்பாடுகள் பட்டயப் படிப்பு பயின்ற மாணவர்கள் தமிழகத்தின் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் நேரடியாக இரண்டாம் ஆண்டில் பி.காம் படிப்பில் சேர்ந்து பயில வழிவகை செய்யப்படும். பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 32 மாவட்ட மைய நூலகங்களுக்கு தலா 750 பாட நூல்கள் ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும். கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் மாணவியர் விடுதி ரூ.14 கோடியில் கட்டப்படும். மதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் ரூ.15 ேகாடியில் மாணவர் விடுதி கட்டப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: