துணைவேந்தர்கள் நியமனத்தில் மாற்றம் குறித்து ஆலோசனை அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 25 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசியதாவது: அரசு கலைகல்லூரிகளில் காலை நேர, மாலை நேர படிப்பு கொண்டு வந்து மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது திமுக ஆட்சியில் தான். கிராமப்புற மாணவர்கள் ஆரம்பகல்வி பயில காரணமாக எப்படி காமராஜர் இருந்தாரோ அதுபோல அந்த மாணவர்கள் உயர்கல்வி பயில காரணமாக இருந்தவர் கலைஞர் தான். கல்லூரிகளில் சேர எல்லா பாடப்பிரிவுக்கும் ஒரே விண்ணப்பம் என்ற நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர்.  அடித்தட்டு மக்களின் உணர்வுகளை உணர்ந்தவர் கலைஞர் தான். செவித்திறன் குறைந்தவர்களுக்கு தனியாக கல்லூரியை உருவாக்கி கொடுத்தவர் கலைஞர் தான்.

அண்ணா பல்கலையின் கீழ் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 0.83 சதவீதம் தான். எனவே மருத்துவ கல்லூரியை போன்று 7.5 சதவீதம் பொறியியல் படிப்புகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தமாக 6.4 சதவீதம் தான் இருந்தது. இப்போது அது உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது. இதற்கு துணைவேந்தர் தான் காரணம். அவர் போட்ட வழக்கால் தான் இந்த பிரச்னை. எனவே, துணை வேந்தர் நியமனத்தில் உள்ள பிரச்னை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் இருக்கிறது. அதற்கான வழிகாண வேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வை தவறான முறையில் நடத்தியதால், 20 சதவீதம் மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனால், முதல்வர் ஆணையை ஏற்று மறுபடியும் ேதர்வு நடத்தி அதன் முடிவு இன்று வெளியிடப்பட இருக்கிறது.

உயர்கல்வி மன்றம் என்கிற ஒன்று உள்ளது. அந்த மன்றத்தில் 7 வருடமாக துணை தலைவர் யாரையும் போடவில்லை. அதில் தற்போது தான் துணை தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலையில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி இப்போது மருத்துவ கல்வியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் வேறுபடுகிறது. அந்த மாணவர்களுக்கு மற்ற தனியார் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 25 சதவீதம் மாணவர்களுக்கு நிச்சயமாக அரசு கல்லூரிகளில் இடம்  உயர்த்தி தரப்படும். ஈரோட்டில் உள்ள கல்லூரியை அரசு ஏற்று நடத்தும். தென்காசி மேலிநீலிதநல்லூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியை தனி அலுவலர் ஏற்று நடத்தும் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: