தமிழகத்தில் உயர் கல்வியை மேம்படுத்த வல்லுனர் குழு: காங்., உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை: பள்ளி,உயர் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் (காங்கிரஸ்) பேசியதாவது: உயர்கல்வியை பொறுத்தவரை தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 500க்கும் மேற்பட்ட பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால் கண்டுபிடிப்பு குறியீடு என்ற குறிப்பில் 20 பல்கலை, 40 மருத்துவ கல்லூரிகள், 200 கல்லூரிகளை கொண்ட கர்நாடகாவை விட நாம் இதில் பின்தங்கி உள்ளோம். உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டின் படி 131 நாடுகளில் நாம் 48வது இடத்தில் தான் உள்ளோம். இந்த நிலையை மேம்படுத்த பொருளாதாரத்திற்கு என்று வல்லுநர் குழுவை அமைத்தது போல முதல்வர், உயர்கல்விக்கும் ஒரு வல்லுநர் குழுவை அமைத்து தமிழகத்தை நமது நாட்டின் அறிவாற்றலின் தலைநகரமாக மாற்ற ஆவன செய்ய வேண்டும்.

பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி பணிகளை தமிழகத்திலே மேற்கொள்ள ஊக்குவிக்கும் விதத்தில் ரிசர்ச் பார்க் அமைத்திட வேண்டும்.இதன் மூலம் உள்நாட்டு கண்டுபிடிப்புகள் அதிகரிக்கப்படும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் கூட இங்கே வந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வாய்ப்பாக அமையும். அமைச்சர் பொன்முடி: உயர் கல்விக்காக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று உறுப்பினர் பேசினார். இந்த நிதி நிலை அறிக்கையிலேயே கல்விக்காக வல்லுனர்களை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் இப்போது உயர் கல்விக்காக ஒரு மன்றமும் செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: