நகையை விற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்கள் மனநிலை மாற வேண்டும்: சேலம் ஜி.ஹெச்.சில் குழந்தை பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பேட்டி

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அளித்த பேட்டியில், அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை கிடைக்கிறது, நகையை விற்று தனியார் மருத்துவமனையில் சேர வேண்டும் என்ற மக்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும் என்று பேட்டியளித்தார். சேலம் மாவட்டம் பேளூரை அடுத்த கரடிப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த தெய்வசிகாமணி மகள் தர்மலாஸ்ரீ (29). இவர் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட உதவி கலெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு மருத்துவர் தாமரைக்கண்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கர்ப்பமான தர்மலாஸ்ரீ, மகப்பேறு விடுப்பில் சேலம் வந்தார். கடந்த வாரம் பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே கடந்த வியாழக்கிழமை காலை தர்மலாஸ்ரீக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக சேர்ந்து, குழந்தை பெற்றெடுத்தது  அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. முழுமையான சிகிச்சை முடிந்து இன்று தர்மலாஸ்ரீ டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். இது குறித்து ஐஏஎஸ் அதிகாரி தர்மலாஸ்ரீ அளித்த பேட்டியில், ‘‘ஆரம்ப காலங்களில் கேரளாவில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வந்தேன். பின்னர், மகப்பேறுக்காக தாய் வீட்டிற்கு வந்தேன்.

அரசு மருத்துவமனையிலேயே தரமான சிகிச்சை கிடைப்பதால், இங்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தேன். குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி, மருத்துவமனையில் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டேன். ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் கூட மகப்பேறு சிகிச்சைக்காக தங்கள் நகைகளை அடகு வைத்தாவது தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும்  சூழல் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மிகுந்த அக்கறையோடு, தரமான சிகிச்சை வழங்கினர்.என்னை உறவினர் போல பாவித்து உதவிய அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார்.

Related Stories: