வெள்ளியூர் கிராமத்தில் சமுதாய கூட கட்டுமான பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

ஊத்துக்கோட்டை: வெள்ளியூர் கிராமத்தில் சமுதாய கூட கட்டுமான பணிகளை எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆய்வு செய்தார். பெரியபாளையம் அருகே வெள்ளியூர் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம், நிச்சயதார்த்தம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகளை நடத்த பெரியபாளையம்,  திருவள்ளூர் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்குள்ள திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டியிருந்தது. அவ்வாறு நிகழ்ச்சிகள் நடத்த அதிக அளவில் வாடகை மற்றும் செலவுகளை எதிர்க் கொண்டு வந்தனர்.   

எனவே, வெள்ளியூர் பகுதியில் சமுதாய கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தங்களது தொகுதி எம்எல்ஏ ஆ. கிருஷ்ணசாமியிடம்  கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதன் கட்டுமான பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த பணிகளை பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி நேற்றுமுன்தினம் மாலை ஆய்வு செய்து கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரதிடம் உத்தரவிட்டார். அப்போது, அவருடன் திருவள்ளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன், ஊராட்சி துணைத்தலைவர் முரளி கிருஷ்ணன்,  ஒன்றிய கவுன்சிலர் வேலு, முன்னாள் ஊராட்சி மன்ற  தலைவர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: