தமிழகத்தில் கடந்த 23ம் தேதி மட்டும் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 23ம் தேதி ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் மற்றும் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், டீன் தேரணிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ரூ.1 கோடி செலவில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ராஜிவ்காந்தி மருத்துவமனையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த 98.3% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15,74,477 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து தமிழகத்தில் அதிகமான சோதனை செய்யப்பட்ட மருத்துவமனையாக ராஜிவ்காந்தி மருத்துவமனை விளங்குகிறது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 1001 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது 207 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 2.87 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் (23ம் தேதி) ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: