இலவச பேருந்து திட்டத்தால் இரு சக்கர வாகன திட்டத்துக்கு பெண்களிடம் வரவேற்பு இல்லை: அமைச்சர் பெரியகருப்பன் பதில்

சென்னை: அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி (அதிமு.க) பேசியதாவது: அதிமுக ஆட்சியில் அம்மா இரு சக்கர வாகன திட்டம் வேலைக்கு செல்லும் பெண்களுக்காக கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் தொடர்வது குறித்து 2021-2022ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஏதும் குறிப்பிடவில்லை. இந்த திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இந்த பட்ஜெட்டில் அம்மா உணவக திட்டத்தின் செலவினத்திற்கான நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன்: இந்த அரசு பொறுப்பேற்றதும், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் அறிவிக்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெரிவித்திருந்தோம். அதன்படி ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாகப் பயணிக்கும் வகையிலான திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பதவியேற்றதும் முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இது பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். நீங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகன திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்றார்.

Related Stories: