தோகைமலை அருகே விபத்து பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்தது-பயணிகள் உயிர் தப்பினர்

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை வழியாக நேற்று மாலை முசிறியில் இருந்து மணப்பாறை நோக்கி அரசு பேருந்து வந்தது. பேருந்தை துறையூர் அருகே உள்ள எரகுடியை சேர்ந்த ரெங்கராஜன் மகன் செந்தில்(40) என்பவர் ஓட்டி வந்து உள்ளார். இதில் நடத்துநராக தா.பேட்டையை சேர்ந்த ஜெயராமன்(51) என்பவரும் பணியில் இருந்து உள்ளார். பேருந்தில் குழந்தைகள் உள்பட 35 பயணிகள் பயணம் செய்தனர்.

மணப்பாறை குளித்தலை மெயின் ரோடு தோகைமலை சாமுண்டான்குளம் அருகே உள்ள வளைவில் அரசு பேருந்து வந்து கொண்டு இருந்தது.அப்போது எதிரே தோகைமலை அருகே மணச்சணம்பட்டியை சேர்ந்த தங்கவேல் மகன் மணிமாறன்(26) என்பவர் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மணிமாறன் திடீர் என்று ரோட்டின் குறுக்கே மோட்டார் சைக்கிளை ஓட்டி உள்ளார்.

அவர் மீது பேருந்து மோதாமல் இருக்க டிரைவர் ரோட்டை விட்டு இறக்கியதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த சாமுண்டான்குளத்தின் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கூச்சல் போட்டு உள்ளனர்.தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் பேருந்தில் சிக்கிக்கொண்ட பயணிகள் மற்றும் டிரைவர், நடத்துனரை மீட்டனர்.

இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த பேருந்து ஓட்டுனர் செந்தில் மற்றும் பேருந்தில் பயணம் செய்த மணப்பாறை மாராச்சிரெட்டிபட்டி லதா(38), துலக்கம்பட்டி இந்திரா(55), கோடாலிபட்டி அன்னக்கிளி(44), ரக்‌ஷன் (3), இனியா(6), புத்தாநத்தம் ராஜேந்திரன்(28) ஆகியோர் தோகைமலை அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று சென்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் விபத்துக்கு காரணமாக இருந்த மணிமாறனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தால் நேற்று தோகைமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: