ஆழியார் அணையிலிருந்து உபரி நீர் குளங்களுக்கு திறந்து விடப்பட்டன

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது. அணையில் இருந்து உபரி நீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்த ஆண்டு தொடர் மழையால் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து சோலையார் அணை, பரம்பிக்குளம் அணை மற்றும் ஆழியாறு அணை நீர்மட்டம் அதிகரித்தது. இதில் 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணை நீர்மட்டம் நேற்று 119 அடியை எட்டிய நிலையில், அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை குளங்களுக்கு திருப்பி விட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில், ஆய்வு செய்யப்பட்டு, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களுக்கு உபரி நீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டது.

இதில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  உபரிநீர் வீணாகாமல் தடுக்கும் வகையில், பொள்ளாச்சி கால்வாயில் 200 கன அடியும், வேட்டைக்காரன் புதூர் கால்வாயில் 48 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் பாலாறு படுகை மற்றும் ஆழியாறு படுகையில் உள்ள சமத்தூர் எலவக்கரை குளம்,  ஆனைமலையை அடுத்த குப்புச்சிபுதூர் குளம், பாப்பத்தி பள்ளம் குளம், மேலும் கரியாஞ்செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள 7 தடுப்பணைகள், மஞ்சநாயக்கனூரில் உள்ள 25 தடுப்பணைகள் பில்சின்னாம்பாளையத்தில் உள்ள குட்டைகளுக்கும், தடுப்பணைகளுக்கும் உபரிநீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆழியார் அணை உபரி நீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, வரும் காலங்களில் விவசாயம் செழிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்த பொள்ளாச்சி விவசாயிகள், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: