திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதங்களில் மட்கும் பிரசாத பை அறிமுகம்: மக்காச்சோளத்தில் தயாரானது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுற்றுச்சூழலை பாதிக்காத மக்காச்சோளத்தில் செய்யப்பட்ட, 3 மாதங்களில் மட்கும் லட்டு பிரசாத பை நேற்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பைகளில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பதால் இந்த பைக்கு அரசு தடை விதித்தது. இந்த பைகளுக்கு பதிலாக சணல் பைகள் தரப்படுகின்றன. ஆனால், இதன் விலை அதிகமாக இருப்பதால் பக்தர்கள் அதிகளவில் வாங்குவதில்லை.

இந்நிலையில், குறைந்த விலையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் லட்டு பை தயாரிக்க தேவஸ்தானம் முடிவு செய்து,  ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை (டிஆர்டிஓ) அணுகியது. இதன்படி, 3 மாதத்தில் மட்கும் தன்மை கொண்ட லட்டு பை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பைகள் நேற்று காலை முதல் டிஆர்டிஓ தலைவர் சதீஷ், தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி ஜவகர், கூடுதல் செயல் அதிகாரி தர்மா முன்னிலையில் பக்தர்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ரூ.50 விலைக்கு விற்பனை செய்யும் 5 லட்டுகள் தாங்கும் பை ரூ.2க்கும், ரூ.200க்கு விற்பனை செய்யும் கல்யாண உற்சவ லட்டுகள் மூன்றையும் தாங்கும் பை ரூ.5க்கு விற்கப்படுகிறது.

Related Stories: