கே.பி.பார்க் பூங்கா விவகாரம்: முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..! முதல்வருக்கு அறப்போர் இயக்கம் கடிதம்

சென்னை: கே.பி.பார்க் பூங்கா அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அறப்போர் இயக்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி. பூங்கா பகுதியை சேர்ந்த மக்களுக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் மோசமான தரத்தில் கட்டப்பட்டுள்ளது. குடியிருப்பின் 8 தளங்களில் சுமார் 100 பேர் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டுமான தரம் உள்ளது. தரம் இல்லாத 3ம் தர சிமென்ட், செங்கல் உள்ளிட்ட பொருட்களால் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. கட்டுமானத்தில் முறைகேடு நடந்திருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் தளங்களுக்கு இடையே லிப்ட் வேலை செய்யவில்லை. குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு தேவையான தண்ணீரும் முறையாக விநியோகிக்கப்படவில்லை. எனவே கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இத்தகைய முறைகேடுகள் அரங்கேறியிருக்கும் நிலையில், குடிசை மாற்று வாரியத்திற்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள மக்கள் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பதை தள்ளுபடி செய்ய வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் எப்ஐஆர் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். இனி வரும் காலங்களில் குடிசை மாற்று வாரிய ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்க வேண்டும். தன்னிச்சையான தரம் சோதிக்கும் பிரிவை உருவாக்க வேண்டும். குடியிருப்பு வாசிகளுக்கு தரமான கட்டிடத்தை உறுதி செய்ய வேண்டும்.

Related Stories: