விருதுநகரில் 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் அல்லோகலப்படும் சாலைகள்

விருதுநகர்: விருதுநகரின் அனைத்து சாலைகளும் ஆக்கிரமிப்பாளர்களால் சந்துகளாக மாறி வருகிறது. மெயின்பஜார், தெப்பம், நகராட்சி ரோடு, பெ.சி.தெரு, போஸ்ட் ஆபிஸ் தெரு, கந்தபுரம் தெரு, காசுக்கடை பஜார், அக்ரஹாரம் தெரு, பழைய பஸ் நிலைய சுற்றுச்சாலைகள், ரயில்வே பீடர் ரோடு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரோடு முன்புறம், மதுரை ரோடு, சிவகாசி ரோடு, சாத்தூர் ரோடு, காமராஜர் பைபாஸ் ரோடு என அனைத்து ரோடுகளிலும் மக்களுக்கான நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. கடைகளுக்கு வருவோர் வானங்களை ரோடுகளில் நிறுத்தி செல்லும் நிலையால், மக்கள் நடுரோட்டில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உருவாகி உள்ளது.

மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படாத நிலையில் 40 அடி அகல சாலைகள் 15 அடிகளாக, 20 அடி சாலைகள் 8 அடியாக, 15 அடி சாலைகள் 5 அடிகளாக சுருங்கி விட்டன. தேசபந்து மைதானத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் முறையற்ற வகையில் புதிது, புதிதாக கடைகள் முளைத்திருப்பதால் மக்கள் அஞ்சலகம், கோவில்களுக்கு சென்று வரமுடியாத சூழல் உருவாகி உள்ளது. மேலும் 40 அடி அகலமுள்ள போஸ்ட் ஆபீஸ் ரோட்டில்  பூக்கடையினரின் தடாலடி ஆக்கிரமிப்புகளால் ஓத்தையடி பாதையாக சுருங்கி விட்டது. நடைபாதைகள் பாதசாரிகளுக்கானதா, கடையினருக்கானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடுரோட்டில் நடந்து செல்லும் மக்கள் வாகனங்களால் விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், வாடகை மற்றும் சொந்த கடைகளை தாண்டி நடைபாதைகளில் வைக்கப்படும் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும். மீறி வைத்தால் கடையினருக்கு எச்சரிக்கை, அபராதம், பறிமுதல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: