தமிழக அரசின் கடனை எப்படி கட்டி முடிப்பது?....பாஜ தலைவர் அண்ணாமலை கேள்வி

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் நிதி நிலவரம் குறித்து நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டும், பட்ஜெட் உரையிலும், தமிழ்நாட்டில் பெருகிவரும்  கடன் சுமை குறித்தும், தொடர்ந்து ஏற்படும் வருவாய் இழப்பு குறித்தும் புள்ளி விவரங்களுடன் விளக்கி இருந்தார்.  1999-2000-ரூ.18,989 கோடி கடன் இருந்தது. இது 2000-2001-ரூ.28,685 கோடி ஆக உயர்ந்தது. 2011-2012-ரூ.1,03,999 கோடி, 2015-2016-ரூ.2,11,483 கோடியாக இந்த கடன் உயர்ந்தது. கடந்த 2017-2018  ரூ.3,14,366 கோடியாக இருந்தது. 2021ம் ஆண்டில் மொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் மொத்தம் ரூ.2,63,976 கடன் உள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை என்பது 3.16 சதவிதமாக உள்ளது. இதற்கு முன் தமிழ்நாடு இவ்வளவு பெரிய பற்றாக்குறையை சந்தித்தது கிடையாது. இந்த பட்ஜெட்டின் கவலைக்குரிய அம்சம் என்றால், அது தமிழக அரசின் பெருகிவரும் கடன் தான். இனி என்ன செய்து தமிழக அரசாங்கம் எப்படி இந்தக் கடனை திரும்பக் கட்டி முடிக்கப்போகிறது என்ற கேள்விக்கு திமுக அரசின் பட்ஜெட்டில் பதில் கிடைக்காமலே இருக்கிறது.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: