காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் குவியல், குவியலாக கிடக்கும் காலாவதி உணவுப்பொருட்கள்: கடைகளில் ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை

காரியாபட்டி: காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் காலாவதியான தின்பண்டங்கள் கொட்டப்பட்டுள்ளன. எனவே, கிராமங்கள் தோறும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி அருகே கல்குறிச்சி மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காலாவதியான சிறுவர்கள் சாப்பிடக்கூடிய தின்பண்ட பொருட்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாக்கெட்டுகளை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சாலையின் ஓரத்தில் வீசி விட்டுச் சென்றுள்ளனர். இதை அருகில் உள்ள கிராமத்து சிறுவர்கள் எடுத்து சாப்பிட்டு வருகின்றனர். அத்துடன் அப்பகுதியில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களும் சாப்பிடுகின்றனர்.

 இதனால் அவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது போன்ற தின்பண்டங்களை வியாபாரம் செய்யும் காரியாபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமபுரத்தில் உள்ள கடைகள் அனைத்தையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு காலவதியான உணவு பொருட்களை கைப்பற்ற வேண்டும். இவற்றை கடைகளில் விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: