நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்வடிவு இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும்: பேரவையில் உதயநிதி ஸ்டாலினின் கன்னி பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்வடிவு, இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவையில், நிதி நிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் (திமுக) பேசியதாவது: தமிழ்நாட்டின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக இருப்பது நீட் தேர்வு. அனிதாவில் தொடங்கி 14 மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டனர்.  நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டின் அனைத்து தரப்பையும் பாதிக்கிறது. நீட்டால் திமுகக்காரர் வீட்டு பிள்ளைகள் மட்டுமில்லை, அதிமுக, பாமக, காங்கிரஸ், வி.சி.க ஏன் பாஜவினர் வீட்டு பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றன.

எனவே, நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நீட் தேர்வு ரத்து என்பதை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். இந்த நேரத்தில், முதல்வருக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன். நீட் ஒழிப்பு போராளி அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்று அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர். அப்படி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட. இக்கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றி தருவார் என நம்புகிறேன்.

இரண்டாவது கோரிக்கையாக, நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். என் மீதும் அந்த வழக்கு உள்ளது. இதற்கு பதிலளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இங்கே எனக்கு முன்னால், தன்னுடைய கன்னிப் பேச்சை பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வகையிலே பல வினாக்களை எல்லாம் தொடுத்து, இங்கே நம்முடைய உறுப்பினர் உதயநிதி பேசியிருக்கிறார். எனவே, அந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிற துறையினுடைய அமைச்சர்களிடமிருந்து, மானியக் கோரிக்கை விவாதங்களின்போது, அதற்குரிய விளக்கங்களைப் பெறலாம்.

ஆனால், முக்கியமான ஒன்று, ‘நீட்’ பிரச்னை குறித்து அவர் இங்கே அழுத்தம்திருத்தமாகக் குறிப்பிட்டுச் சொன்னார். நீட் பிரச்னையைப் பொறுத்தவரையில், கட்சிப் பாகுபாடுகளை எல்லாம் மறந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து, அதற்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்ற நிலையிலே நாம் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த அடிப்படையிலேதான், தேர்தல் நேரத்திலே நாங்கள் உறுதிமொழி தந்தோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான் நம்முடைய லட்சியமாக இருக்கும். அதுகுறித்து நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்’ என்று உறுதிமொழி தந்திருக்கிறோம்.    

அதனால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே, இதுபற்றி அலசி ஆராய்ந்து, பொது மக்களுடைய கருத்துகளையெல்லாம் கேட்டு, ஆய்வு அறிக்கையை அரசுக்கு வழங்கிட வேண்டுமென்று சொல்லி, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலே ஒரு குழு அமைக்கப்பட்டு, அவரும் அந்தப் பணியை நிறைவேற்றி, ஒரு அறிக்கையைத் தந்திருக்கிறார்கள். தற்போது அந்த அறிக்கை சட்டரீதியாகப் பரிசீலிக்கப்பட்டு, இந்தக் கூட்டத் தொடரிலேயே அதற்குரிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

* ஸ்டாலின் பஸ்

பேரவையில் திமுக உறுப்பினர் உதயநிதி பேசும்போது,‘‘தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது போல மகளிருக்கு இலவச பேருந்து பயணம், அதனை முதல்வர் பெயரை சொல்லித்தான், அதாவது கலைஞர் தொலைக்காட்சி பெட்டி வழங்கியபோது எப்படி அது கலைஞர் தொலைக்காட்சி ஆனதோ, அதேபோல நமது முதல்வர் இலவச பேருந்து பயணம் அறிவித்த பிறகு நகர பேருந்தை அனைவரும் ‘ஸ்டாலின் பஸ்’ என்றே அழைக்கின்றனர்.

Related Stories: