ராணிப்பேட்டை அருகே 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை

கலவை: கலவை அருகே 15 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள வெல்லம்பி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 5 மாதங்களாக இங்கு கொள்முதல் செய்த நெல்லுக்கு உரிய பணம் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதை கண்டித்து சில வாரங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சரிவர பாதுகாப்பான முறையில் வைக்காமல் வெட்டவெளியில் வைப்பதாக புகார் எழுந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைகாரணமாக ₹1 கோடி மதிப்புள்ள சுமார் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. தற்போது இதில் உள்ள நெல் முளைக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘வீட்டிலிருந்த பொருட்களை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் நெல் பயிரிட்டு விற்பனை செய்தோம். ஆனால் தற்போது வரை அதற்கான தொகையை வழங்கவில்லை.

இதே நிலை நீடித்தால் அடுத்த போகம் நெல் பயிர் வைக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் கூட்டுறவு வங்கியில் கூட்டு பட்டாவிற்கு பணம் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே வறுமையில் உள்ள எங்களுக்கு நெல் மூட்டைகள் வீணாகியுள்ளதால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என தெரிவித்தனர்.

Related Stories: