சிதிலமடைந்த புளியந்தோப்பு குடியிருப்பு பகுதியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு நேரில் ஆய்வு..!!

சென்னை: சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் குடியிருப்பு கட்டடத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் சுமார் 250 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட புளியந்தோப்பு கே.பி. பார்க் குடியிருப்பு பகுதியில் பல்வேறு இடங்கள் சிதிலமடைந்து தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வதாக அங்குள்ள குடியிருப்பு வாசிகள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடத்தின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதலமடைந்து மோசமான நிலையில் இருப்பது பற்றி செய்தி வெளியானது.

இது குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது. இந்த கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசைமாற்று வாரியத்தில் கட்டப்பட்ட குடியிருப்பு கட்டிடத்தின் தரத்தை சிறப்பு குழு அமைத்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு குழுவினரின் ஆய்வறிக்கையை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள மக்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கைக்கு உத்தரவிடுவதற்கு முன்னர் கட்டிடத்தின் நிலை என்னவாக உள்ளது. பொதுமக்களின் புகாரில் உள்ள உண்மைத்தன்மை என்ன? என அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: