திண்டிவனம் ராமமூர்த்தி, மதுசூதனன், அய்யாறு வாண்டையார் மதுரை ஆதீனம் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், 2021-22ம் ஆண்டிற்கான திருத்திய நிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். கடந்த 14ம் தேதி (சனி) இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழக சட்டப்பேரவையில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான தங்கராசு, ராமச்சந்திரன், பண்ணை சேதுராம், பூ.ம.செங்குட்டுவன், அய்யாறு வாண்டையார், விஜயசாரதி, நன்னிலம் அ.கலையரசன், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.

இதையடுத்து பெரியார் சிந்தனையாளர் ஆனைமுத்து, பிரபல காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் காமேஸ்வரன், பழங்குடியின மக்களின் உரிமை போராளி ஸ்டேன் சுவாமி, தமிழறிஞர் அய்யா இளங்குமரனார், மதுரை ஆதீன பீடாதிபதி அருணகிரிநாதர் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர் அப்பாவு படித்தார். இதையடுத்து. மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து 2021- 22ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது.

Related Stories: