அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் காரைக்குடி, மதுரை மீனாட்சியம்மன் உபகோயில்களில் அர்ச்சகர் நியமனம்

காரைக்குடி: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சியம்மன் உப கோயில்கள், காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நேற்று கோயிலில் அர்ச்சனை மற்றும் பூஜைகள் செய்யும் பணியை தொடங்கினர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 1970ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞர் சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். பல்வேறு சட்ட வழக்குகள் காரணமாக அதனை நிறைவேற்ற முடியவில்லை.இந்நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 58 பேரை அர்ச்சகராக நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பணி ஆணை வழங்கினர்.பணி ஆணையை பெற்றுக்கொண்டு வந்த மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் உப கோயிலான தேரடி கருப்பசாமி திருக்கோயிலில் அர்ச்சகராகவும், மகாராஜன் மேலூர் ஆமூர் அய்யம்பொழில் ஈஸ்வரர் கோயில் அர்ச்சகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் நேற்று பணியை தொடங்கினர்.

அருண்குமார் கூறும்போது, ‘‘2006ம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்று 15 ஆண்டுகளாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தின் கீழ் வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன்.எனது குடும்பம் மிகுந்த ஏழ்மையில் இருந்த நிலையில் தனியார் கோயில்களில் அர்ச்சனை மற்றும் பூஜைகள் செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தினேன்.தமிழக முதல்வரின் உத்தரவால் அவரது கையால் பணி ஆணையை பெற்று வந்த மறுநாளே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான உப கோவிலான மதுரை கீழமாசி வீதியில் உள்ள தேரடி கருப்பசாமி கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு, அர்ச்சனை செய்தது மிகுந்த பாக்கியமாக நான் கருதுகிறேன். பணி ஆணை வழங்கிய தமிழக முதல்வருக்கும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் குன்றக்குடியை சேர்ந்த ரவீந்திரன் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளார். இவர் கடந்த 2007-08ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சகர் பயிற்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாத நிலையில், தற்போது பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரவீந்திரன் கூறுகையில், ‘‘காரைக்குடிக்கு அருகே குன்றக்குடி எனது சொந்த ஊர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சகர் பயிற்சி முடித்தேன். பணிநியமனம் செய்யப்படாத நிலையில், தற்போது தமிழக முதல்வரின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் மூலம் பணிநியமனம் வழங்கியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயியம்மன் கோயிலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலைச் சேர்ந்த இளவழகன் (33) அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், ‘‘தேவாரம், திருவாசகம், சங்கல்பம் கற்றுள்ளேன். எனக்கு அரசு தமிழில் அர்ச்சனை செய்யும் பணி வழங்கியதை மிகவும் பாக்கியமாகக் கருதுகிறேன். முறையான பயிற்சி பெற்ற என்னை போன்ற அனைத்து சாதியினரும் கோயிலில் பணியாற்றுவதன் மூலம் தமிழ் வளர்ச்சியடையும். எனக்கு பணி வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’’ என்றார்.

Related Stories: