பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய வரலாற்றுச் சாதனையாளர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: வைகோ பாராட்டு

சென்னை: பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய வரலாற்றுச் சாதனையாளர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த 58 அர்ச்சகர்களுக்கு, பணி நியமன ஆணையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய காட்சி நம்மையெல்லாம் மகிழ்ச்சிப் பெருங்கடலில் மிதக்கச் செய்தது.மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலிலும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் தமிழ் அர்ச்சகர்கள் தமிழில் அர்ச்சனை செய்யும் காட்சியும், ஓதுவாராக பணி நியமனம் பெற்ற ஓர் சகோதரி “போற்றி, போற்றி” என்று தமிழில் வழிபாடு செய்யும் காட்சியும் நம்மை பெரிதும் பரவசம் கொள்ளச் செய்துவிட்டது.

அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த 216 பேருக்கு ஆலயங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பினை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வழங்கும் சமத்துவச் சாதனையை, அமைதிப் புரட்சியை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிகழ்த்தி இருக்கிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக 1970ம் ஆண்டு குடியரசு தினத்தில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் அறிவித்தார். தமிழக முதல்வர் கலைஞர் பெரியாரைச் சந்தித்து, அதற்கான நடவடிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று உறுதி அளித்ததை ஏற்று, பெரியார் அவர்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

தந்தை பெரியார் மறைந்தபோது, “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரவில்லையே! என்ற கவலை பெரியாரின் நெஞ்சில் முள்ளாய் குத்தியது. அந்த முள்ளோடுதான் பெரியாரை புதைத்திருக்கிறோம்” என்று கண்ணீர்மல்க குறிப்பிட்டார் முதல்வர் கலைஞர். அந்த முள்ளை அகற்றும் அரும்பெரும் சாதனையைத்தான் இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சாதனையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அமைதிப் புரட்சியை, சமத்துவப் புரட்சியை, இரத்தம் சிந்தாப் புரட்சியை நிறைவேற்றி, நமது அரசு பொதுநல அரசு என்று அகிலத்திற்கு பறைசாற்றியுள்ள தமிழக முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சர், அலுவலர்கள் முதலான அனைவருக்கும் இதயம் கனிந்த, இதயம் நிறைந்த இனிய வாழ்த்துகள்! பாராட்டுகள்! இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: