இரண்டாவது அலையைப் போன்று 3வது அலை மோசமானதாக இருக்காது: எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

விசாகப்பட்டினம்: கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பதில் தடுப்பூசி பெரும் பங்காற்றுகிறது. 2வது அலையைப் போன்று 3வது அலை அவ்வளவு மோசமானதாக இருக்காது என டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா  தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் ரந்தீப் குலேரியா பேசுகையில், ‘கொரோனா தொற்றானது, இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை.

இருப்பினும், 2வது அலையைப் போன்று 3வது அலை அவ்வளவு மோசமானதாக இருக்காது. மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற பொதுவான அச்சம் நிலவுகிறது. ஏனெனில், பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர், குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. ஏற்கனவே 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளை கொரோனா தொற்று தாக்கியதாக ‘செரோ’ ஆய்வு கூறுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைத்துவிடும் என்பதால், விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைக்கும்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்பட்டால், அது தீவிரமான பாதிப்பாக இருக்காது. கொரோனா தொற்று தாக்கினாலும், மரணத்தில் இருந்து தடுப்பூசி காப்பாற்றும். இப்போதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களாகவே உள்ளனர். அதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்’ என்றார்.

Related Stories: