தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்திரசேகரை புதிய தலைவராக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் வாகை சந்திரசேகர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 80 மற்றும் 90களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர். கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான நண்பா நண்பா என்கிற திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் 1993 ஆம் ஆண்டு கலைமாமணி விருதையும் பெற்றவர்.

2016 முதல் 2021 வரை வேளச்சேரி தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்தார். இவரை தமிழகத்தின் இயல், இசை, நாடக மன்ற தலைவராக நியமித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது தலைவராக இருக்கும் இசையமைப்பாளர் தேவாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் வாகை சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்தவும் தமிழக கலைகளை பாதுகாக்கவும் அரசின் திட்டங்களால் நாடக கலைஞர்கள் பலனடைய செய்யவும் இவரை புதிய தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. இவர் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் பொறுப்பையும் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: